< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 July 2022 11:43 AM IST

கள்ளக்குறிச்சி சம்பவம் திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.

பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பற்றி வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி என்.சதீஷ்குமார் இன்று நடத்திய விசாரணையின் போது, "நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?, போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்?

வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது.

வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த வழக்கில் நீதிமன்றம் நியமிக்கும் மருத்துவர்கள் குழு மறு பிரேத பரிசோதனை செய்வர். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு எடுக்க வேண்டும், மாணவியின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் உடன் இருக்கலாம். 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது" என்று அவர் கூறினார். மேலும் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்