< Back
மாநில செய்திகள்
துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் கடற்பகுதியில் சிறுவன், சிறுமி உடல் - சென்னையில் அதிர்ச்சி
மாநில செய்திகள்

துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் கடற்பகுதியில் சிறுவன், சிறுமி உடல் - சென்னையில் அதிர்ச்சி

தினத்தந்தி
|
25 May 2024 4:59 AM IST

கடலில் கைகளை கட்டிய நிலையில் ஸ்ரீசாந்த், சந்தியா இருவரும் பிணமாக மிதந்து கொண்டு இருந்தனர்.

சென்னை,

சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீசாந்த் (வயது 14) என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான். மாணவனும், அவனது எதிர்வீட்டில் வசிக்கும் சந்தியா (15). என்ற சிறுமியும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தெரிந்ததும் அவர்களை இருவீட்டு பெற்றோரும் கண்டித்தனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் இருவரும் சந்தித்து காதலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை ஸ்ரீசாந்தும், சந்தியாவும் ஒரே மொபட்டில் வெளியே சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருவரது செல்போன் சிக்னலை வைத்து திருவொற்றியூர், சுதந்திரபுரம் கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடலில் கைகளை கட்டிய நிலையில் ஸ்ரீசாந்த், சந்தியா இருவரும் பிணமாக மிதந்து கொண்டு இருந்தனர்.

இதையடுத்து மீனவர்கள் உதவியுடன் பைபர் படகில் கடலுக்குள் சென்று இருவரது உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சந்தியாவின் துப்பட்டாவால் இருவரது கைகளையும் சேர்த்து கட்டி கொண்டு இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர்.

இருவரும் வேறு, வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்