< Back
மாநில செய்திகள்
மாட்டு தொழுவத்தில் பச்சிளங்குழந்தை உடல்.. தகாத உறவில் பிறந்ததா? - நெல்லையில் பரபரப்பு
மாநில செய்திகள்

மாட்டு தொழுவத்தில் பச்சிளங்குழந்தை உடல்.. தகாத உறவில் பிறந்ததா? - நெல்லையில் பரபரப்பு

தினத்தந்தி
|
9 May 2024 7:41 AM IST

மாட்டு தொழுவத்தில் குழந்தையின் தொப்புள் கொடி, கத்தரிக்கோல் உள்ளிட்டவை கிடந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள இத்திக்குளத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவரது வீட்டுக்கு பின்னால் மாட்டு தொழுவம் அமைத்து அங்கு மாடுகளை கட்டி வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக அவரது மனைவி தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது தொழுவத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, காளிராஜிக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து பச்சிளம் பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் கூட ஆகியிருக்காது என்று விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் தொழுவத்தில் குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் ஒரு கத்தரிக்கோல் உள்ளிட்டவை கிடந்தது. இதனால் அந்த குழந்தை தகாத உறவால் பிறந்திருக்கலாம். அதனால் அவமானம் என்று கருதி யாரேனும் இந்த குழந்தையை கொன்று இங்கு வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்