தேனி
போடி மலைப்பகுதியில் காட்டுத்தீ:மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
|போடி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வடக்கு மலை, அகமலை, மரக்காமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காப்பி, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 3 முறை காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் ஏராளமான மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமாகின. மேலும் இந்த தீ விபத்தால் வனவிலங்குகள் அங்கிருந்து இடம்பெயர்ந்தன.
இந்நிலையில் நேற்று இரவு வடக்குமலை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த தீ மெல்ல, மெல்ல அங்கு கிடந்த சருகுகளில் பரவி மரங்களிலும் பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மள, மளவௌ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் மூலிகை செடிகள், தேக்கு. தோதகத்தி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின. மேலும் வெப்பம் தாங்க முடியாமல் வனவிலங்குகள் அங்கிருந்து ஓடின. தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.