தேனி
போடி பகுதியில்ஒரு வாரத்தில் 4 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்:தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
|போடி பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள காமராஜர் பஜார், புதிய பஸ் நிலையம், சர்ச் தெரு, சீனிவாசன் நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இவை அடிக்கடி சாலைகளில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடித்து வருகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். போடி நகராட்சி 3-வது வார்டு பகுதியான போஜன் பூங்கா அருகே உள்ள சீனிவாசன் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 4 பேரை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.
அவர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போடி நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த பகுதியில் அங்கன்வாடி மையம், தனியார் பள்ளி உள்ளதால் தெருநாய்களால் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.