< Back
மாநில செய்திகள்
குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

குற்றாலத்தில் படகு சவாரி நேற்று தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகுகளில் உற்சாகமாக பயணம் செய்தனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. சாரல் மழை பெய்யவில்லை. வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக இருந்தது. அவர்கள் அருவிகளில் மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.

குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் உள்ளது. குற்றாலம் சீசனின்போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை அங்கு படகு சவாரி தொடக்க விழா நடந்தது. தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் படகு சவாரியை தொடங்கி வைக்க வந்தனர். அப்போது அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுற்றுலா பயணியை அழைத்து 'ரிப்பன்' வெட்டி படகு சவாரியை தொடங்கி வைக்க செய்தனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் படகுகளில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் இயற்கை அழகை ரசித்தபடி பயணித்தனர். அங்கு பெடல் படகுகள், துடுப்பு படகுகள் என மொத்தம் 31 படகுகள் உள்ளன. படகுகளில் செல்வோர் 'லைப் ஜாக்கெட்' எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார், படகு குழாம் மேலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்