குற்றாலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய படகு சவாரி..!
|குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் படகு சவாரியை தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்துக்கு வந்து செல்கிறார்கள்.
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணமடை குளத்தில் படகு குழாம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சீசன் சமயத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனை இன்று காலை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். படகு சவாரி தொடங்கப்பட்டதும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர்.
படகு சவாரிக்காக பெடல் படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் தனி நபர் செல்லும் கயாக் படகு ஆக மொத்தம் 32 படகுகள் உள்ளன. இவற்றில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன. படகு சவாரி அரை மணி நேரத்திற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் கீழ்கண்டவாறு விதிக்கப்பட்டுள்ளது.
இரு நபர் பெடல் படகு | ரூ.150 |
நான்கு நபர் பெடல் படகு | ரூ.200 |
நான்கு நபர் துடுப்பு படகு (20 நிமிடம்) | ரூ.250 |
தனி நபர் கயாக் | ரூ.150 |