< Back
மாநில செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு
சிவகங்கை
மாநில செய்திகள்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு

தினத்தந்தி
|
9 March 2023 12:15 AM IST

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு சிம்ம வாகனம், அனுமன் வாகனம், தங்க கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க தோளுக்கினியானில் புறப்பாடு, தங்க குதிரை, தங்க பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10-வது நாளான நேற்று முன்தினம் காலை மற்றும் இரவு தெப்பக்குளம் மண்டபத்தில் தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய பெருமாள் பகல் தெப்பம் மற்றும் இரவு தெப்பத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

நேற்று நிறைவு நாளான நேற்று தெப்பக்குளத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்