சென்னை
புழல் அருகே பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் மோதல்; 2 பேர் காயம்
|புழல் அருகே பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர்.
சென்னையை அடுத்த புழல் சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புழல் அடுத்த திருமால் நகரைச் சேர்ந்த சிவகுமார்(வயது 40), சசிகுமார்(42) மற்றும் புழல் பத்மாவதி நகரைச் சேர்ந்த மூர்த்தி(44), பாலச்சந்தர்(44) ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது மூர்த்திக்கும், சிவகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த மூர்த்தி, பீர் பாட்டிலால் சிவகுமார் மற்றும் சசிகுமார் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, பாலச்சந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.