< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம் நடத்தும்:  அன்புமணி ராமதாஸ்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம் நடத்தும்: அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
1 Aug 2022 2:00 PM IST

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது என்பதை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் கடந்த ஓராண்டில் மட்டும் 27 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஈடு செய்ய முடியாத விலை ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது. ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று கவர்னருக்கு மூலமாக பிறப்பிக்க வேண்டும். இதில் தாமதம் செய்யப்பட்டால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் நடத்தப்பட்டது போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்