பாமக 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
|பாமக 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடலூரில் அண்மையில் என்.எல்.சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து பாமகவின் 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கினார். மாலை 6 மணிக்கு துவங்கும் பொதுக்கூட்டம் இரவு 8 மணி வரை நடத்திக்கொள்ளவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது; ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு கட்சியினரை வழி நடத்த வேண்டும்; இதற்கு கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்; வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்.