< Back
மாநில செய்திகள்
பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்

தினத்தந்தி
|
8 Oct 2023 5:54 PM GMT

கறம்பக்குடி பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

பூக்கள் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் நெல், கரும்பு, சோளம், வாழை, ஆகியவற்றோடு பூக்கள் சாகுபடியிலும் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி மஞ்சுவிடுதி, பட்டத்திக்காடு, சூரக்காடு, மழையூர், அம்புக்கோவில், ரெகுநாதபுரம், தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சாமந்தி, செண்டி, கோழிக்கொண்டை, செவ்வந்தி போன்ற பூச்செடிகள் இப்பகுதியில் பயிரிடப்படுகின்றன.

சாமந்தி பூக்கள் விலை குறைவு

குறிப்பாக சாமந்தி மற்றும் செண்டி பூக்களுக்கு செலவு குறைவு, அதிகம் தண்ணீர் தேவை இல்லை, 30 நாட்களில் மகசூல் போன்ற காரணங்களால் இவை அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இம்மாத தொடக்கத்தில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களாலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சமாந்தி பூக்களுக்கான தேவை குறைத்துவிட்டது. பெருமாள் வழிபாட்டிற்கு சம்பங்கி, துளசி போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சாமந்தி பூக்களின் விலை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்ட சாமந்தி பூக்கள் தற்போது ரூ.40-க்கு மட்டுமே விற்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சொற்ப விலைக்கு கொள்முதல்

இதுகுறித்து மழையூர் பகுதியில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், நிலையற்ற விலைதான் பூக்கள் பயிரிடும் விவசாயிகளை நிலைகுலைய செய்துவிடுகிறது. கடைகளில் வியாபாரிகள் மாலை மற்றும் பூக்களின் விலையை வாடிக்கையாளர்களுக்கு குறைத்துக் கொடுப்பது இல்லை. ஆனால் வரத்து அதிகம் என்ற காரணம் காட்டி மிக சொற்ப விலைக்கு எங்களிடம் கொள்முதல் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் வர உள்ள நிலையில் வரும் நாட்களில் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்து உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்