அரியலூர்
கோவில்களில் நடை அடைப்பு
|சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.
சந்திர கிரகணம்
சந்திர கிரகணத்தையொட்டி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று நடைகள் அடைக்கப்பட்டது. நேற்று பெரம்பலூரில் சிறிது நேரம் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து மாலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இதனால் சந்திரகிரகணம் தோன்றி மறைவதை பொதுமக்களால் பார்க்க முடியவில்லை.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் திறக்கப்படுவதும், அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடைசாத்தப்படுவது வழக்கம்.
நடை அடைப்பு
ஆனால் சந்திர கிரகணத்தையொட்டி பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் மதியம் உச்சிகால பூஜைக்கு பிறகு நடை அடைக்கப்பட்டது. பின்னர் சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு இரவு 7 மணிக்கு மேல் கோவில் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார் மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் உள்ள திருமேனிகளுக்கு தைலக்காப்பு செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது.
கோவிலின் முன்புறம் உள்ள கம்பத்து ஆஞ்சநேயர் திருஉருவம் சந்திர கிரகணத்தையொட்டி துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கிரகணம் நிறைவடைந்த பிறகு துணி அகற்றப்பட்டு திருமஞ்சனமும், ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு இரவு 7 மணி வரை நடைசாத்தப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மூலவர் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சந்திர கிரகணத்தையொட்டி நடை சாத்தப்பட்டு, இரவில் திறக்கப்பட்டது.