< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லியில் பார்வையற்றோர் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூந்தமல்லியில் பார்வையற்றோர் விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
14 Oct 2023 1:48 PM IST

பூந்தமல்லியில் பார்வையற்றோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பூந்தமல்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் சார்பில் உலக வெண்கோல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பார்வையற்றவர்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் இயல்பாக நடமாட வெண்கோல் பயன்படுத்தி வருகின்றனர். அக்டோபர் 15 சர்வதேச வெண்கோல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பார்வையற்றோர் பயன்படுத்தி வரும் வெண்கோல் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த பேரணி நடைபெற்றது. இதையொட்டி பூந்தமல்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவ, மாணவிகள் வெண் கோல்களுடன் பேரணியாக கரையான்சாவடி சந்திப்பு வரை சென்றனர்.

இந்த பேரணியை பூந்தமல்லி (பொறுப்பு) உதவி கமிஷனர் சதாசிவம் தொடங்கி வைத்தார். பேரணியில் சென்றவர்கள் வெண்கோல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி ஸ்ரீப்ரியா, ஆராய்ச்சி அதிகாரி தாகூர், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பொற்பாதம் மற்றும் ஏராளமான பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்