'தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம்' - வானதி சீனிவாசன்
|தேர்தல் தேதி அறிவிப்பைக் கூட அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனிடையே தேர்தல் தேதியை அறிவித்ததில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பைக் கூட அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவிப்பைக் கூட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கி விமர்சனம் செய்கிறார்கள். தேர்தல் தேதியை தெரிந்து கொண்டுதான் பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்கிறார்கள். அவர் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கேரள மாநிலத்திற்கும் செல்கிறார். கேரளாவில் நமக்குப் பின்னர்தான் தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது என்பது தேர்தலுக்கு முன்னதாகவே தோல்வியை ஒப்புக்கொள்ளும் செயலாக நாங்கள் பார்க்கிறோம்."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.