மயிலாடுதுறை
ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கல் தடுப்பு சுவர்
|பூம்புகார் அருகே புதுக்குப்பம் மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கல் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
திருவெண்காடு:
கடல் அரிப்பால் மீனவ கிராமம் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது இயற்கை சீற்றத்தால் கடல் அலைகள் எழும்பி கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுந்து விடுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் கடல் நீர் உட்புகுவதை தடுத்திட ஏதுவாக கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நிவேதா முருகன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புது குப்பம் மீனவ கிராமத்தில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
ரூ.9 கோடியில் கருங்கல் தடுப்பு சுவர்
இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கருங்கல் தடுப்பு சுவர் மற்றும் மீன்வலை பின்னும் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி வரவேற்றார்.
அமைச்சர் மெய்யநாதன்
விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கருங்கல் தடுப்பு சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வானகிரி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மீன்பிடி இறங்குதளம்
இதேபோல் திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை தூர்வாரி மேம்படுத்திட ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நீண்ட நாட்களாக கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் சின்ன மேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுத்திட ஏதுவாக கருங்கல் தடுப்பு சுவர் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மீனவர் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடல் அரிப்பை இயற்கை முறையில் தடுத்திட ஏதுவாக கடற்கரை பகுதியில் பனைவிதைகள், புங்கன் மரங்களை நடுவதற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் முன் வர வேண்டும். இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் முழு ஒத்துழைப்பு தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மீன்பிடி திட்ட கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நன்றி கூறினர்.