விழுப்புரம்
பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டம் அரசூர் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
|அரசூர் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர் அனிதா, ஊராட்சி செயலாளர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு, கட்டப்படாமல் உள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
மேலும் அங்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ,பூமி பூஜை போட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது என்று கூறி, கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதே இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.