நீலகிரி
தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
|லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் திரண்டனர். அப்போது மந்திரியின் மகன் வாகனம் கூட்டத்துக்குள் புகுந்ததில், 4 விவசாயிகள் இறந்தனர். தொடர்ந்து நடந்த கலவரம் உள்பட என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் எல்.பி.எப். (போக்குவரத்து) தலைவர் நெடுஞ்செழியன், விவசாய சங்க செயலாளர் யோகண்ணன், ஏ,ஐ.டி.யு.சி. தலைவர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.