"கருப்பு உருவம் என்னை பின்தொடர்கிறது.."- தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவியின் திகிலூட்டும் வாக்குமூலம்
|கருப்பு உருவம் ஒன்று தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று குதித்து விளையாட வற்புறுத்தியதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று விளையாட்டு நேரத்தில் திடீரென பள்ளியின் முதலாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் அந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவி கூறிய தகவல் போலீசாரையே திகிலடையச் செய்யும் வகையில் இருந்தது. அதாவது கடந்த சில நாட்களாக தன்னை ஒரு கருப்பு உருவம் பின்தொடர்ந்து வருவதாகவும், சம்பவத்தன்று அந்த உருவம் தான் மாடிக்கு தன்னை அழைத்துச் சென்று குதித்து விளையாட வற்புறுத்தியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார், சட்டப்பிரிவு 309-ன் கீழ் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.