கரூர்
பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பா.ஜ.க.வினர் மனு
|பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பா.ஜ.க.வினர் மனு அளிக்கப்பட்டது.
புகழூர் நகராட்சி 8-வார்டு பா.ஜ.க கவுன்சிலர் கோபிநாத் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், வேலாயுதம்பாளையம் போலீசார் இதுவரை 4 பொய்யான புகார்களை என் மீது போட்டு உள்ளனர். கடைசியாக என் மீது போட்ட பொய்யான புகாரை தொடர்ந்து முன் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவுப்படி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன். இந்நிலையில் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட சென்றபோது அங்கு இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தன்னை தகாதவார்த்தையால் பேசினார். மேலும் எங்களது கட்சியின் வளர்ச்சியை பிடிக்காமல் தொடர்ந்து போலீசார் பொய்யான வழக்குகளை பதிந்து, எங்களது கட்சி நிர்வாகிகளை தொடர்ந்து கட்சி பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். மேலும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சினை செய்து வருகின்றனர். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..
அப்போது கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.