பா.ஜனதா தேர்தல் கூட்டணி 2 நாளில் முடிவாகிவிடும்-அண்ணாமலை பேட்டி
|கோவை,
கோவை சாய்பாபா கோவில் சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் (ரோடு ஷோ) வாகன அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது. முன்னதாக வாகன அணிவகுப்பு நிறைவு செய்யும் பகுதியை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அண்ணாமலை ேபட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கோவை மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம். இவர்கள் அனைவருக்கும் சேர்த்துதான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துகிறார்.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் முடிவாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "தற்போதுதான் இது பற்றிய செய்திகள் வந்து உள்ளதாகவும், அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.