கடலூர்
பா.ஜ.க.வினர் பிச்சை எடுத்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
|கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டியல் சமுதாயத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பிய, தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணியினர் பிச்சை எடுத்து நிதி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் காரை கண்ணன் தலைமை தாங்கினார்.
இதையடுத்து பா.ஜ.க.வினர் உண்டியலில் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார், பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றும், அதனால் அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் பா.ஜ.க.வினர் கலைந்து செல்லாமல், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், பாரதி சாலையின் நடுவே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கைது
உடனே போலீசார் அவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றிச்சென்று மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.