மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - கனிமொழி
|மதம், மொழி, இனத்தால் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
மகளிர் அணி அறிமுக கூட்டம்
தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் உள்ள கருணாநிதி அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மகளிர் அணி துணை செயலாளரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி எம்.எல்.ஏ., மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன் (மேற்கு), மதிவாணன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை பொதுச்செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:-
மக்கள் தொகை குறைவு
பெண் விடுதலை, பெண்களுக்கான உரிமையை காக்க இன்றைக்கு திராவிட கழகமும், தி.மு.க.வும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மகளிர் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்தவர் கருணாநிதி. 33 சதவீதம் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அப்போதே கருணாநிதி ஏற்படுத்தி கொடுத்தார். அவர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளார். தமிழகம் இன்றைக்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பில் மக்கள் அதிக அளவு முன்னேறி வருவதால், இங்கு மக்கள் தொகை குறைந்து காணப்படுகிறது. இதனால், தொகுதி மறுவரையறை செய்யும் போது தமிழகம் போன்ற மாநிலங்கள் பாதிப்பு அடையும்.
இந்தியா கூட்டணியை பார்த்தாலே பா.ஜ.க.வுக்கு பயம் வருகிறது. மதம், மொழி, இனம் போன்றவற்றில் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. எனவே அதனை முறியடிக்க பெண்களாகிய நாம் போராட வேண்டும். வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் நீங்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.