தேனி
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்
|பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
பெரியகுளம் நகராட்சியில் மத்திய, மாநில அரசின் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. அந்த வண்டிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் மட்டும் இடம் பெற்றுள்ளது, பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. இந்நிலையில் பிரதமரின் படம் இடம்பெறாததை கண்டித்தும், நகராட்சி கூட்டரங்கில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்ய வலியுறுத்தியும் நேற்று நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான ராஜபாண்டி தலைமை தாங்கினார். நகர தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபி கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் சன்னாசிபாபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது தள்ளுவண்டிகள் வழங்கப்படும் பயனாளிகளை பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வண்டிகளில் பிரதமர் படம் இடம் பெறாததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் புனிதனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.