நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் - நயினார் நாகேந்திரன்
|தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திர போராட்டி தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 151-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், நான் அமைச்சராகவும் இருந்த போது நெல்லையில் வ.உ.சி. மணிமண்டபத்தை கட்டி தந்தோம்.
அந்த மணி மண்டபத்தில் திறப்பு விழா படங்கள் எதுவும் இல்லை. வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வருகிறார். அவரிடம் இதுபற்றி கோரிக்கை வைப்பேன். ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பிதயன் அடிப்படையில் வ.உ.சி. மணி மண்டபத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
நெல்லை சந்திப்பில் வ.உ.சி., பாரதியார் படித்த பள்ளிக்கு ரூ.1 கோடி நிதி தந்து உள்ளார். அதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் மணிமண்டபத்தில் திறப்பு விழா புகைப்படங்களையும் வைக்க வேண்டும். மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் ஜெயலலிதா கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அந்த திட்டமும் தொடர வேண்டும். தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.