பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம்; அண்ணாமலை பங்கேற்பு
|பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
ஆவடி,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடியில் நேற்று மாலை தேசிய கொடியை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுடன் அண்ணாமலையும் தேசிய கொடியை கையில் ஏந்தி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து ஆவடி காமராஜர் சிலை வரை புதிய ராணுவ சாலையில் பேரணியாக நடந்து சென்றார். பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றி முன்னெடுப்பது அவசியம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடவேண்டும். அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். பால்வளத்துறையில் ஊழல் நடைபெற்று வருகின்றது. அமைச்சர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.