ராமநாதபுரம்
மணல் எடுக்க பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
|ராமநாதபுரம் அருகே மணல் எடுக்க பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பகுதியில் பல டிப்பர் லாரிகளில் மணல் எடுத்து வெளியில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் பா.ஜ.க.வினர் கடற்கரை அருகே உள்ள நொச்சியூரணி பகுதிக்கு சென்றனர். அங்கு பெரிய பள்ளம் உருவாகும் வகையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று மணல் எடுப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் வந்த வருவாய்த்துறையினர் ஆழமாக மணல் அள்ளியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த பகுதியில் மணல் எடுப்பதற்கு தடை விதித்தனர். இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் பவர் நாகேந்திரன், மணிமாறன், கதிரவன் மற்றும் தனசேகரன், சீனிவாசன், ஜோதிபாசு, நந்தகுமார், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.