சென்னை
பா.ஜ.க. அரசை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
|இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்ககூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் டி.எச்.ரோடு கலைஞர் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஜே.ஜே.எபினேசர் தலைமை தாங்கினார்.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 40 பேருக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.10 கோடியில் விளையாட்டு மையம், ரூ.6 கோடியில் நடைபாதை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமூகநீதி கொள்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதல்-அமைச்சர் திகழ்ந்து வருகிறார். பா.ஜ.க அரசை நாம் எதிர்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்க கூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் எபினேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, கே.பி.சங்கர், ஆர்.டி.சேகர், தாயகம் கவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.