புதுக்கோட்டை
பா.ஜ.க. அரசு இந்திய அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தவில்லை
|பா.ஜ.க. அரசு இந்திய அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தவில்லை என்று காதர் மொய்தீன் கூறினார்.
புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது பா.ஜ.க. அரசு இந்திய அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கவர்னர்களை வைத்து அனைத்து அசம்பாவிதங்களையும் செய்து வருகின்றனர். பெங்களூரூவில் நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக எந்த விவாதமும் நடத்தவில்லை. மேகதாது அணையை கர்நாடகாவால் கட்ட முடியாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் சம்மதம் தெரிவித்தால் தான் மேகதாது அணை கட்ட முடியும். அரசியலுக்காக வேண்டுமென்றால் கர்நாடக அரசு கூறி வரலாம். அனைவரும் விவாதித்த பிறகு இந்தியா என்று பெயரை முடிவு செய்து மம்தா பானர்ஜி தான் இதனை அறிவித்தார். இந்த பெயரில் பா.ஜ.க கூட்டணி பெயரான என்.டி.ஏ. என்று வருவதால் பெயரை மாற்ற வேண்டும் என்று நிதீஷ் குமார் கூறினார். இந்தியன் மெயின் அலையன்ஸ் என்று பெயர் வைக்கலாம் என்று நிதீஷ் குமார் கூறினார். இந்த பெயர் கவரும் வகையில் இல்லாததால் இந்தியா என்ற பெயரை மற்ற தலைவர்கள் தேர்ந்தெடுத்தனர். மாநிலங்களுக்கு, மாநிலங்கள் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.