< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது - காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா
மாநில செய்திகள்

பா.ஜ.க. சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது - காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா

தினத்தந்தி
|
27 May 2023 7:19 PM GMT

‘பா.ஜ.க. சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது' என்றும், ‘கர்நாடக தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம்' என்றும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

நேரு நினைவு தினம்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59-வது ஆண்டு நினைவு தினம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான ராஜீவ் கவுடா கலந்துகொண்டு நேரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். துணைத்தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எம்.எஸ்.திரவியம் உள்பட மாவட்ட தலைவர்கள் என மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ராஜீவ் கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலும், வெறுப்பு அரசியலும்...

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி, மோடியின் மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி ஆகும். அந்தவகையில் மோடியின் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டும் காலம் தொடங்கிவிட்டது. கர்நாடகா தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு போடப்பட்டிருக்கும் அச்சாரம் ஆகும். கடந்த 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி மெகா தோல்வியை தான் கண்டிருக்கிறது.

இந்தியாவில் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக, மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் சிறு தொழில்கள் அழிந்தன. விவசாயத்துக்கு எதிரான சட்டங்கள் திரும்பப்பெற்ற போதும், விவசாயிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மதிப்பிடப்படவில்லை. ஒரு பக்கம் ஊழல், இன்னொரு பக்கம் வெறுப்பு அரசியல் நடக்கிறது. சமூக நீதி கேள்விக்குறியாக இருக்கிறது.

தக்க பாடம் கற்பிப்போம்

கடந்த 9 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். ஏழைகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளால் உள்நாட்டு உற்பத்தி 21 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பா.ஜ.க.வுக்கு, நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தக்க பாடம் கற்பிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்