'சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்' - டி.கே.எஸ்.இளங்கோவன்
|சனாதன தர்மமும், மனு தர்மமும் வெவ்வேறானது என்று விளக்கினால் நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த மாநாட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டிருந்தார்.
இதே போல் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும், எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடக்கோரியும் இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்து வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், அதில் எதிலும் தண்டனை அறிவிக்கப்படவில்லை என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்' என தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும். சனாதன தர்மம் குறித்து விளக்கமளிக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. சனாதன தர்மமும், மனு தர்மமும் ஒன்று என்பது எங்களுக்கு தெரியும். ஒருவேளை சனாதன தர்மமும், மனு தர்மமும் வெவ்வேறானது என்று அவர்கள் விளக்கினால் நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.