கடலூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு பா ம க வினர் எதிர்ப்பு
|கடலூர் முதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் நடப்பட்டதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வருவாய்த்துறையினர் அதை அப்புறப்படுத்தினர்
கடலூர் முதுநகர்
பா.ம.க.வினர் திரண்டனர்
கடலூர் முதுநகர் பகுதி அருகே உள்ள சுத்துகுளம், கடலூர்-சிதம்பரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் திடீரென அனுமதியின்றி நடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ம.க. முன்னாள் மாநில நிர்வாகி பழ.தாமரைக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சகாதேவன், மாவட்ட முன்னாள் செயலாளர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் பா.ம.க.வினர் ஏராளமானோர் அங்கு ஒன்று கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
போலீஸ் குவிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பா.ம.க. வினர் அதிகம் உள்ள பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் நடப்பட்டுள்ளதால், அதை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என பா.ம.க.வினர் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சாலை மறியல் செய்ய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
வருவாய்த்துறையினர் அகற்றினர்
அப்போது நாளை காலை(அதாவது நேற்று காலை) 10 மணிக்குள் அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், நாங்கள் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவோம் என பா.ம.க.வினர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து, பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் துணை தாசில்தார் அசோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அனுமதியின்றி நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றினர். இச்சம்பவத்தால் கடலூர் முதுநகரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.