< Back
மாநில செய்திகள்
235 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

235 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 July 2023 12:15 AM IST

தமிழக அரசை கண்டித்து குமரி மாவட்டத்தில் 235 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

தமிழக அரசை கண்டித்து குமரி மாவட்டத்தில் 235 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேர்தல் வாக்குறுதி

குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் வார்டு வாரியாக 235 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். இந்து கோவில்களை இடிக்க கூடாது. கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் மாநகரில் மட்டும் 52 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ.

சாத்தான்கோடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் பங்கேற்று பேசினார். அங்கு திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதே போல நாகர்கோவிலில் ஒவ்வொரு வார்டுகளிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் வெள்ளாடிச்சிவிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்றார். தெங்கம்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், செட்டி தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மீனா தேவ், அரசமூடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், இந்துக் கல்லூரி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் தேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் நுழைவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் பா.ஜனதா தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தினேஷ் நாதன், துணைத் தலைவர் புனிதன், மகளிர் அணி பொருளாளர் அருணா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் துறை பிரிவு ஒன்றிய தலைவர் பெருமாள் வரவேற்று பேசினார். இதில் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் முருகேஷ், மகளிர் அணி துணை தலைவர் அற்புதமேரி அபிலா, ஒன்றிய துணை தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி

ஆரல்வாய்மொழீ சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர பா.ஜனதா தலைவர் நரேந்திரகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் மாதேவன்பிள்ளை, ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் ஆட்டோ ராஜா, நகர பார்வையாளர் சிவனணைந்த பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய பா.ஜ.க. பார்வையாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் சிங்காரவேலு, பாலகிருஷ்ணன், ராணி, சிவஜெனித் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஆரல்வாய்மொழி பகுதிக்கு உட்பட்ட தோவாளை, செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம். தாழக்குடி, சகாயநகர், உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

என்.ஜி.ஓ. காலனி

நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு பா.ஜனதா தலைவர் ஆறுமுகம் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான டி. அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முரளிமனோகர்லால், மிசா.ரெத்தினஜோதி, பா.ஜனதா சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபால் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினர். இதில் பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகீதா, கிளைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜாக்கமங்கலம்

ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திவிளை பிள்ளையார்விளை, ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் செந்தில் அதிபன், மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன், துணைத்தலைவர் காரவிளை ரமேஷ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், துணைத்தலைவர் செல்லதுரை, கவுன்சிலர் ஜெயா, ஹேமா, முன்னாள் கவுன்சிலர் சுகுமார், வினோத், பிரபு, அய்யாசாமி, சந்திரசேகர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்