திண்டுக்கல்
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல், பழனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்கட்டண உயர்வு
தமிழகத்தில், மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
அதன்படி பா.ஜ.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கர், செயலாளர் துரைக்கண்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சிசரண் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழனியில் ஆர்ப்பாட்டம்
இதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பழனி பஸ் நிலைய ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், செயலாளர் மகுடீஸ்வரன், செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் திரளாக வந்து பங்கேற்றனர்.