பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
|பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
அண்ணாமலை டெல்லி பயணம்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அந்த தேர்தலை முன்னிறுத்தி தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த யாத்திரையின் 2 கட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்து உள்ளது.
குன்னூரில் நேற்று தனது 2-ம் கட்ட யாத்திரையை முடித்துக் கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட யாத்திரையை 4-ந் தேதி (வியாழக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்க இருக்கிறார். இந்தநிலையில், அண்ணாமலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குன்னூரில் இருந்து புறப்பட்டு, கோவை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
நட்டா, அமித்ஷாவுடன் சந்திப்பு
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதுதவிர மேலும் சில முக்கிய தலைவர்களையும் சந்திக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலை விரைந்து எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒரு செங்கல் கூட வைக்கவில்லை
இதற்கிடையே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்.
ஆனால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் தி.மு.க.வின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம். தி.மு.க. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பது உறுதி.
அதே நேரத்தில், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.