மயிலாடுதுறை
பா.ஜ.க. பிரமுகர் கட்சி அலுவலகத்துக்கு தீவைப்பு
|பொறையாறு அருகே பா.ஜ.க. பிரமுகரின் கட்சி அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது. தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பொறையாறு:
பொறையாறு அருகே பா.ஜ.க. பிரமுகரின் கட்சி அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது. தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பா.ஜ.க. பிரமுகர்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி குருக்கள்(வயது 49). இவா், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் வசித்து வந்த இடம் தொடர்பாக பாலாஜி குருக்களுக்கும், மற்றொருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலாஜி குருக்கள் எருக்கட்டாஞ்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பழைய வீட்டை கட்சி அலுவலகமாகவும், கோவில் அலுவல் பணி அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார்.
கட்சி அலுவலகத்துக்கு தீவைப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் கட்சி அலுவலகம் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்தினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் முன்பகுதி கொட்டகை எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து பாலாஜி குருக்கள் பொறையாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தீப்பிடித்த இடம் தொடர்பாக எனக்கும், ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் எனது கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது என்னுடன் பிரச்சினையில் உள்ள நபர் எனது அலுவலகத்துக்கு தீவைத்து கொளுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகரின் கட்சி அலுவலகத்திற்கு தீவைத்தவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.க. மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையில் அந்த கட்சியினர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.