< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதாவை புகழ்வதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

ஜெயலலிதாவை புகழ்வதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
28 May 2024 10:08 PM IST

தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்ன் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்..

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,

இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாலாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் தி.மு.க. அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது. கேரளா அரசின் செயலுக்கு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார்.ஜனவரி மாதமே அணை கட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். இது தொடர்பாக எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்தவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை புகழ்வதில் உள்நோக்கமும், அரசியல் சூழ்ச்சியும் இருக்கிறது. இந்துத்துவா என்பது தனி விவாதமானது. அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அதற்கு எடப்பாடியார் விரிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார். உங்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது.

அ.தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் பேசுவதை மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்