< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா-பா.ம.க. கூட்டணி: தொகுதிகளின் எண்ணிக்கையை இன்று அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்
மாநில செய்திகள்

பா.ஜனதா-பா.ம.க. கூட்டணி: தொகுதிகளின் எண்ணிக்கையை இன்று அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்

தினத்தந்தி
|
19 March 2024 4:14 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-பா.ம.க இடையிலான கூட்டணி உறுதியாகி உள்ளது.

திண்டிவனம்,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டுவர தமிழக பா.ஜனதா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதேநேரம், அ.தி.மு.க.வும், பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து விளக்கமாக பேசினார்.

'அனைத்து அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு பார்த்தால், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சாலசிறந்தது' என்றார். அதற்கான, காரணங்களையும் விரிவாக எடுத்துக்கூறினார். அன்புமணி ராமதாஸ் கருத்தை முழு மனதாக ஏற்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் ஆதரித்தனர். கூட்டணி தொடர்பாகவும், தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

ஏற்கனவே, தமிழக பா.ஜனதா கூட்டணியில் த.மா.கா., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பா.ம.க.வும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் செய்திகள்