புகைக்குண்டு வீசிய விவகாரம்: அனுமதி சீட்டு வாங்கியவரை பற்றி பா.ஜ.க. எம்.பி அறிந்திருக்க வாய்ப்பில்லை - மத்திய மந்திரி வி.கே. சிங்
|நாடாளுமன்ற பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை சபாநாயகர் முடிவெடுப்பார் என்று வி.கே.சிங் கூறினார்.
நாகர்கோவில்,
மத்திய சாலை போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் புகுந்து புகைக்குண்டு வீசிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்காவுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பது தொடர்பாக கேட்கிறீர்கள். தன் தொகுதியில் இருந்து வருபவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை ஒரு எம்.பி. தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித்தான் பிரதாப் சிம்கா எம்.பி. அனுமதி சீட்டு கொடுத்துள்ளார். உச்சக்கட்ட பாதுகாப்புக்குரிய இடமான நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகைக்குண்டு வீசிய சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறது.
நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தரவின் பேரில் அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக விசாரித்து வருகிறது. அதன் பிறகு, என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்? என்பதை சபாநாயகர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.