காங்கிரசுக்கு முதல் எதிரி பா.ஜ.க. அல்ல, ஆம் ஆத்மி தான் - விஜயதாரணி எம்.எல்.ஏ
|ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி கலந்துகொண்டு பேசுகிறார்.
நிகழ்ச்சியில், விஜயதாரணி பேசியதாவது:-
குஜராத்தை பொறுத்தவரையில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து இருப்பதாகவும், இதற்கு காரணம் மதச்சார்பற்ற வாக்குகள் காங்கிரசுக்கு முழுமையாக கிட்டாமல் ஆம் ஆத்மியால் சிதறி போய் விட்டது. எங்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இருந்த நேரடி போட்டி தற்போது மும்முனை போட்டியாக களம் மாறி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு நேரடியான முதல் எதிரி பா.ஜ.க. அல்ல, ஆம் ஆத்மி தான்.
இமாசலப்பிரதேச வெற்றிக்கு அங்கு நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுத்து பிரசாரம் செய்ததும், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்க்க கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, பிரியங்கா காந்தியின் தீவிர பிரசாரம் மற்றும் ஆலோசனைகளும் முக்கிய காரணம்
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி மோதல், தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்த கேள்விக்கு, "காங்கிரசில் கோஷ்டி மோதல் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். இது தவிர்க்கமுடியாதது. வருகிற பிப்ரவரி மாதத்துடன் கே.எஸ்.அழகிரி பதவி முடிவடைவதால், பல தலைவர்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள். நானும் இதற்கு முயற்சி செய்து வருகிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்க எனக்கு தகுதி இருக்கிறது" என்றார். இதுபோன்று பல்வேறு கேள்விகளுக்கு விஜயதாரணி சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.