"வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம்" - துரை வைகோ குற்றச்சாட்டு
|வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம் என்று துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.