< Back
மாநில செய்திகள்
மத்தியில் பா.ஜ.க. அரசு முடிவுக்கு வரும்போதுதான் மதுரைக்கு விடிவுகாலம்-மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
மதுரை
மாநில செய்திகள்

மத்தியில் பா.ஜ.க. அரசு முடிவுக்கு வரும்போதுதான் மதுரைக்கு விடிவுகாலம்-மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
21 Jun 2023 6:03 AM IST

பா.ஜ.க. அரசு முடிவுக்கு வரும்போதுதான் மதுரைக்கு விடிவுகாலம் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

திருப்பரங்குன்றம்,

பா.ஜ.க. அரசு முடிவுக்கு வரும்போதுதான் மதுரைக்கு விடிவுகாலம் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

ராகுல்காந்தி பிறந்தநாள்

மதுரை திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் தனக்கன்குளம் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவணபவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார தலைவர்கள் காசிநாதன், பழனிகுமார், முத்துவேல், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாக்கிலிப்பட்டிகாசிநாதன், சர்கிள் தலைவர் நாகேஸ்வரன், இளைஞரணி பொறுப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், வித்யாபதி, விக்னேஷ் ராஜா, தங்க ராஜா உள்பட பலர்கலந்து கொண்டனர்.

மதுரைக்கு விடிவு

இதையடுத்து மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்று அறிவிக்கட்டும் அதன் பிறகு இது பற்றி பேசலாம். மாணவர்களுக்கு தன்னுடைய கருத்துக்களை சொல்லி உள்ளார். கருத்துக்களை சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதை பாராட்ட வேண்டும். மோடி அரசு தமிழக வளர்ச்சியில் மிகப்பெரிய தடைகளை உருவாக்கி வருகிறது.

அது எய்ம்ஸாக இருந்தாலும், மதுரை விமான நிலையம் விரிவாக்கம், 24 மணி நேர சேவையாகஇருந்தாலும், கப்பலூர் டோல்கேட்டாக இருந்தாலும் கடந்த ஆண்டுகளில் தடைகளை உருவாக்குவதை மட்டுமே பணிகளாக செய்கிறது. இந்த அரசின் முடிவு காலம் எப்போது வருகிறதோ அப்போதுதான் மதுரைக்கு விடிவு காலம் வரும். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை காரிய கமிட்டிதான் முடிவு செய்யும். என் தனிப்பட்ட விருப்பம் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமராக வரவேண்டும்.

மேகதாது விவகாரம்

மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் பேச்சு பொறுப்பற்றது. மேகதாது அணை விவகாரத்தில் வேறு எந்தவித நடவடிக்கையையும் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. 2 மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் நிலை வேறாக உள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அரவக்குறிச்சி மக்கள் அடித்த அடியில் அண்ணாமலையின் மூளை குழம்பி உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்த அண்ணாமலையை மக்கள் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் இரண்டு வருடங்களாக பித்து பிடித்தவர் போல பேசுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்