< Back
மாநில செய்திகள்
கடலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்:  இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம்  அண்ணாமலை பேச்சு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் அண்ணாமலை பேச்சு

தினத்தந்தி
|
28 Oct 2022 12:15 AM IST

இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக அரசு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ஜ.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை வேடம்

தி.மு.க. தமிழ்மொழியை வளர்க்கவில்லை, அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன்முதலாக இந்த போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களுக்கு தி.மு.க.வின் சதி திட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுவதற்காகதான் இந்த போராட்டம்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதுவரை இத்தனை பேர் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டாமா? தமிழகத்தில் 2 லட்சம் என்ஜினீயரிங் சீட் உள்ளது. அதில் தமிழ்மொழியில் படிப்பதற்காக 1377 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 50 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

இந்தி எதிர்ப்பு வாசகம்

தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தது தான் இந்தி எதிர்ப்பு என்ற வாசகம். இந்தியை யாரும் திணிக்கவில்லை. தி.மு.க. ஆரம்பகால அரசியலில் மிக தெளிவாக ஆங்கிலத்தை புகுத்தினார்கள். தமிழை சற்று இறக்கி வைத்து விட்டு, ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்து அரசியல் செய்தார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தி எப்போதும் வேண்டாம். ஆங்கிலம் எப்போதும் வேண்டும் என்பது தான். தமிழ் எப்போதும் வேண்டும் என்று கேட்கவில்லை. தி.மு.க. திட்டம் போட்டு, தமிழ் மொழியை அகற்றி விட்டு, ஆங்கிலத்தை கொண்டு வந்தால் உள்ளே வருவது சுலபம் என்று.

அடுத்த போராட்டம்

இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி திணிப்பு என்ற வார்த்தையின் மூலமாக ஆங்கிலத்தை திணிப்பது தான் தி.மு.க.வின் எண்ண ஓட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளிலும் 3-வது மொழி இந்தி தான். இதை மறுக்க முடியுமா? மறுபடியும் இந்தி எதிர்ப்பு என்று ஆங்கிலத்தை புகுத்தினால் அடுத்த போராட்டம் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவில் இருக்கும்.

தற்கொலை படை தாக்குதல்

தமிழக வரலாற்றில் கோவையில் நடந்தது, முதல் தற்கொலை படை தாக்குதல். 13 பேர் திட்டம் போட்டு 75 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சேமித்து, அதை காரில் கொண்டு சென்ற போது. வெடித்துள்ளது. இது தான் உண்மை. இது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. முஸ்லிம் ஓட்டு விழாது என்பதற்காக. கோவையில் உள்ள சிறுபான்மையினரே இந்த சம்பவம் வெட்கக்கேடு என்கிறார்கள்.

தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவது வெட்கக்கேடானது. அரசியல் களம் மாறி விட்டது. தி.மு.க.வின் மத, சாதி அரசியல் எடுபடாது.

ஊக்கத்தொகை

அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் திருமாவளவன் எம்.பி.. அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. கலங்கரை விளக்கு நம் கண்ணுக்கு தெரிகிறது. அதை நோக்கி, படகில் மாலுமிகளாக நாம் செல்ல வேண்டும். அலைகளை தாண்டி சென்றால் தான் மக்களின் நம்பிக்கை கிடைக்கும்.

தமிழகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மூலமாக படிக்க வழிவகை செயய வேண்டும். அதற்காக குழு அமைக்க வேண்டும். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், விவசாய அணி மாநில செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன், சிதம்பரம் நகர தலைவர் என்ஜினீயர் ஜெயக்குமார், ஓ.பி.சி.அணி மேற்கு மாவட்ட செயலாளர் சீனுசங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் கணேசன், சிதம்பரம் அம்மாபேட்டை தேவி ஸ்டோர் உரிமையாளர் விஜயகுமார், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழர் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் கீரப்பாளையம் கீழ்நத்தம் சாவடி சிவ.பிரசாந்த், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சிவபிரகாசம் உள்பட கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெடி குண்டு நிபுணர்கள் சோதனை

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதற்காக திறந்த வெளி மேடையாக ஒரு வாகனத்தில் கட் அவுட்கள், பேனர்கள் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மேடையில் வெடி குண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் பீட் மூலம் வெடி குண்டு ஏதேனும் உள்ளதா? என்றும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் மேடைக்கு அருகிலேயே வெடி குண்டு சோதனை நிபுணர்கள் நின்று சோதனை நடத்தினர். சந்தேகமான முறையில் யாராவது மேடையை சுற்றி வருகிறார்களா? என்றும் தீவிரமாக கண்காணித்தனர். மேடைக்கு பின்புறம் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்