பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளையும் பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர்,
தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக உங்களிடம் உரிமையோடு வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். இந்திய அத்தியாயத்தில் புதிய வரலாற்றை இந்தக் கூட்டம் படைக்க உள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளையும் பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் இருக்காது. நாட்டில் மாநிலங்களும் இருக்காது. பா.ஜ.கவின் பாணி ஒரு சர்வாதிகாரம்; காஷ்மீர் நிலை தமிழகத்திற்கும் நேரலாம்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்கிறார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை நடக்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.