பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்த முயல்வதை பாஜக அரசு கைவிட வேண்டும் - சீமான்
|பாஜக அரசு பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்தத் துடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
பாஜக அரசு பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்த முயல்வதை உடனடியாக கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு பொது உரிமையியல் (சிவில்) சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்தத் துடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்று மத மக்களைக் குறிவைக்கும் மதவாத இயக்கமான ஆர்.எஸ்எஸ் இலக்குகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும் குழிதோண்டிப் புதைக்க மோடி அரசு முயல்வது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
இந்தியாவில் மதவாத பாஜக அரசு கடந்த 2014ஆம் பொறுப்பேற்றது முதல் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே குடும்ப அட்டை, ஒரே கட்சி, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்று நாட்டில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஒற்றைமயமாக்கி அடக்கி ஆள வேண்டும் என்ற கொடும் மனப்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் நீட்சியாக ஆர்எஸ்எஸ் இன் நீண்டகாலச் செயற்திட்டங்களில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்திட தற்போது தீவிரமாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து ஆராய்வதற்காக மோடி அரசால் கடந்த 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம், இரண்டாண்டு ஆய்வுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் தாக்கல் செய்த 185 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், இந்த நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற, பல்வேறு பண்பாடுகளைக் கடைபிடிக்கின்ற பல கோடி மக்களின் சமூக, பண்பாடு வேறுபாடுகளைப் போற்றுவதே நம் நாட்டின் அடிப்படை நியதியாகும். எனவே அதற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, எண்ணிக்கையில் குறைவான மக்கள் பாதிக்கும்படியான நிலையை எப்பொழுதும் ஏற்படுத்திவிடக்கூடாது என்று வரையறுத்துக் கூறியதுடன், தற்போதைய நிலையில், பொது சிவில் சட்டம் தேவையில்லை; அதற்கான சூழ்நிலையும் ஏற்படவில்லை எனவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், உலக அளவில் பல நாடுகளும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை ஏற்கத்துவங்கியுள்ள நிலையில், நீண்ட காலமாக, பன்முகப் பண்பாட்டினை இந்தியாவின் சிறப்பு என்று மார்தட்டும் நாம், நாட்டு மக்களிடம் நிலவும் பண்பாட்டு வேற்றுமைகளை, பாகுபாடு என்று கருதக்கூடாது எனவும், அதுதான் நமது வலுவான மக்களாட்சியின் அடையாளம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
அப்படி பாஜக அரசால் அமைக்கப்பட்ட 21வது சட்ட ஆணையமே நிராகரித்து, நடைமுறைப்படுத்த வேண்டாமென்று எச்சரித்திருந்த பொது சிவில் சட்டத்தைத்தான், 22வது சட்ட ஆணையம் மூலம் தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மக்களைப் பிரித்து, வாக்கு வேட்டையாடும் சூழ்ச்சியுடனேயே, அற்ப அரசியல் ஆதாயத்திற்காக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அரசு மீண்டும் பொது சிவில் சட்டத்தை விவாத பொருளாக்கியுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு மண்ணைக் கவ்வியதோ, அப்படியே எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலிலும் பொது சிவில் சட்டத்தால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
50 ஆண்டுகளுக்கு முன்பே விவாதித்துக் கைவிடப்பட்ட ஒன்றை தற்போது மீண்டும் எழுப்ப வேண்டிய தேவை என்ன வந்தது. இந்த நாட்டில் சொத்துக்கள் அனைத்தும் பொதுவாக உள்ளதா? நிலங்கள் அனைத்தும் பொதுவாக உள்ளதா? பொருளாதாரம் முதல் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைவருக்கும் பொதுவானதாகப் பாகுபாடின்றி வழங்கப்படுகிறதா? அனைவருக்கும் சரியான, சமமான வீடுகள் உள்ளதா? அனைவருக்கும் தரமான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் அவற்றையெல்லாம் வழங்கத் திறனற்ற இந்திய ஒன்றிய அரசு, சட்டத்தை மட்டும் பொதுவானதாகக் கொண்டுவந்து திணித்து எதை சாதிக்கப்போகிறது? முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையை அரசு வழங்கட்டும். அதன் பிறகு ஒரே மாதிரியான சட்டங்களை வழங்குவதைப் பற்றி விவாதிக்கலாம்.
ஏற்கனவே, இந்திய நாட்டில் மக்கள் அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டம் நடைமுறையில் உள்ளது. குற்றம் என்பது எப்பொழுதும் கொடுமையானதும், எல்லோருக்கும் துயரமளிக்கக் கூடியதுதான். எக்குற்றத்தை யார் செய்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றுதான் சட்டமும் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அனைவருக்கும் வழங்கப்படும் தண்டனை ஒரே மாதிரியாக உள்ளதா? இந்த நாட்டில் வசதி படைத்தவனுக்குக் குறைந்த தண்டனையும், பாமரனுக்கு மிகக்கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறதா இல்லையா? ஒரே மாதிரியான குற்றங்களுக்கு, ஒரே மாதிரியான சட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான தண்டனையையே வழங்க முடியாதபோது, வெவ்வேறு பண்பாட்டு வாழ்வியலையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் மீது பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது என்பது எவ்வகையில் நியாயமாகும்?
இந்தியா வெவ்வேறு மொழி பேசும் தேசிய இனங்களின் ஒன்றியம். வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் பல கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர். வெவ்வேறு பூகோள மற்றும் காலநிலைக்கு ஏற்ப வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளனர். வடநாட்டு மக்களும், தென்னாட்டு மக்களும் அடிப்படையில் வேறுபட்ட பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். ஒரே தேசிய இன மக்கள் வாழும் ஒரு மாநிலத்திற்குள்ளேயே வெவ்வேறு பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பின்பற்றப்படுகின்றன. வட கிழக்கு மாநில மக்கள் முற்றிலும் வேறு விதமான பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலைவாழ் மற்றும் பழங்குடி மக்களும், அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் ஆதிவாசிகளும் திருமணம், வாரிசுரிமை, மண முறிவு உள்ளிட்ட வாழ்வியல் முறைகளில் தொன்றுதொட்ட தங்களது பழமையான வழக்கப்படி தனித்துவமான பண்பாடுகளைக் கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அவர்கள் அனைவரையும் ஒரே சட்டத்திற்குள் அடைத்து, அவர்களது அடையாளங்களையும், வாழ்வியல் முறைகளையும் அழித்தொழிக்க நினைப்பது அறமற்ற கொடுஞ்செயலாகும். நாட்டின் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கே இது எதிரானது இல்லையா? இந்து மதத்திலிருந்து லிங்காயத்துகள் தனி மதமாக தங்களைப் பிரித்துக் கொண்டுவிட்டனர். சீக்கியர்களோ இந்து மத சட்டத்திற்குள் தங்களை அடைத்தது தவறு என்று எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு மதத்திற்குள் அடைபட்டதையே மக்கள் விரும்பாத நிலையில், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களை ஒரே சட்டத்திற்குள் அடைக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்?
ஒற்றுமை (Unity) என்பது வேறு; ஒற்றைமயமாக்கல் (uniformity) என்பது வேறு. மதச்சார்பின்மையும், பன்முகத்தன்மையும் இந்த நாட்டின் ஆணி வேர்கள். பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் மதங்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பே இந்நாட்டினை 75 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கச்செய்கிறது. ஆனால், பொது சிவில் சட்டம் மூலம் அதன் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை பாஜக அரசு கைவிடாவிட்டால் மிகக்கடுமையான எதிர் விளைவுகளை இந்நாடு சந்திக்க நேரிடும். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை என்றைக்கும் இந்த நாட்டிற்குப் பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பதே உறுதியான, தெளிவான நிலைப்படாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்த முயல்வதை உடனடியாக கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.