பா.ஜனதா அரசு ஊழல் ஆட்சி நடத்துகிறது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
|ஒரு கிலோ மீட்டர் ரோடு போட ரூ.250 கோடி என்று மதிப்பு காட்டி உள்ளார்கள். இதனால் பா.ஜனதா அரசு ஊழல் ஆட்சி நடத்துகிறது என்று கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கோவை
தி.மு.க. இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அமைப்பாளராக பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட்தேர்வு வரவில்லை. அவர் இறந்த பிறகு பா.ஜனதாவின் வற்புறுத்தலால் தான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். நீட் தேர்வு வந்ததில் இருந்து அனிதா உள்பட 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். அனிதா உயிருடன் இருந்து இருந்தால் மருத்துவர் ஆகி இருப்பார். இந்த ஆண்டு சென்னையில ஜெகதீஷ் என்ற மாணவா தற்கொலை செய்துகொண்டார். அவரின் தந்தையும் துக்கம் தாங்காமல் உயிழிந்தார். எனவே தான் நீட் தேர்வு ரத்துக்காக 60 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. புதிய கல்விக்கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று கூறுகிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையா? இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார்.
சி.ஏ.ஐ. ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் பா.ஜனதா அரசு ரூ.7½ லட்சம் கோடி பணத்தை காணோம். எங்கே போனது என்று தெரியவில்லை. அதுபோன்று ஒரு கிலோமீட்டர் ரோடு போட ரூ.250 கோடி என்று மதிப்பு காட்டி உள்ளனர். மேலும் ரமணா சினிமா பாணியில் ஆயுஷ்மான் திட்டத்தில் மோசடி செய்து ஊழல் செய்து உள்ளது. பா.ஜனதா அரசு ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது" என்றார்.