'ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. மரியாதையோடு நடத்துகிறது'புகழேந்தி பேட்டி
|ஓ.பன்னீர்செல்வம் மீது பிரதமர் நரேந்திரமோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியிருக்கிறார். பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்து விட்டது, ஒட்டுமொத்தமாக விலகி விட்டோம் என்பதை தான் சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலமாக எடப்பாடி பழனிசாமி உணர்த்தி இருக்கிறார். சி.வி.சண்முகத்தின் பேச்சு ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்பது தெளிவாகி விட்டது.
4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது பா.ஜ.க. கூட்டணி தேவைப்பட்டது. ஆட்சியில் இல்லை என்றதும் தேவைப்படவில்லை. அன்று அ.தி.மு.க.வில் ஒற்றுமை தேவைப்பட்டது. இப்போது திடீர் கோபம் ஏன் என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும்,
ஓ.பன்னீர்செல்வம் மீது பிரதமர் நரேந்திரமோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. மரியாதையோடு நடத்துகிறது. ஊழல்வாதிகளோடு கூட்டணி இல்லை என்பது தான் பா.ஜ.க.வின் முடிவு. இதில், அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.