தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம்
|நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க.வும் தனது கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
அதுபோல் பா.ஜ.க.வும் தனது கூட்டணியில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள் என்பதை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பா.ஜ.க. கட்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
புதிய நீதிக்கட்சி தலைர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாய கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்காக கடந்த 10-ந்தேதி மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னை வந்தனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அன்றைய இரவு தங்கியிருந்த அவர்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார். தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் வழங்கினார். அதேபோல், அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரனும், பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
அதன் பின்னர் மத்திய மந்திரிகள் 2 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, பன்னீர் செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோர் நேற்று இரவு மீண்டும் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்த அவர்களுடன் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்தநிலையில் நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்த மத்திய மந்திரிகளை சந்தித்து கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று இரவு 12.15 மணிக்கு வந்தனர். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க - அ.ம.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டது. பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வந்தனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும், சின்னம் குறித்தும் மத்திய மந்திரிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து கூறினார்.
இன்று (புதன்கிழமை) காலை மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார்.
பா.ம.க.வுடனும் இன்று பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது கூட்டணியை இந்த வாரத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.