கள்ளக்குறிச்சி
பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றம்
|சின்னசேலம் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றம்
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள வெட்டி பெருமாள்அகரம் கிராமத்தில் பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சிக்காக சாலையோரத்தில் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கொடிக்கம்பம் அரசு அனுமதி பெறாமல் நடப்பட்டு இருப்பதாக காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகிகள் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், தகரை லோகநாதன், வெட்டிபெருமாள் அகரம் பெரியசாமி, பாண்டியன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.