< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா நிர்வாகிக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு
திருச்சி
மாநில செய்திகள்

பா.ஜனதா நிர்வாகிக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:28 AM IST

பாலக்கரையில் பா.ஜனதா நிர்வாகியை கத்தியால் குத்தியதாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பா.ஜனதா நிர்வாகிக்கு கத்திக்குத்து

திருச்சி பாலக்கரை எடத்தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கியாஸ் வினியோகிப்பாளரான இவர், 33-வது வார்டு பா.ஜனதா கட்சி தலைவராக உள்ளார். இந்தநிலையில் கண்ணனின் வீட்டுக்கு மாடியில் வசித்து வரும் அருண்குமார், கண்ணனின் தாயார் மேல்மாடிக்கு சென்ற போது தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட கண்ணனை அருண்குமார் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்ததுடன் அவரை கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரையும், அவருடைய நண்பர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

பீர் பாட்டிலால் தாக்குதல்

இதேபோல் லால்குடி அருகே உள்ள கொப்பவல்லி நடுத்தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டையை சேர்ந்த சக்தி முகிலன் (23) என்பவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர் பார்த்திபனிடம் புரோட்டா இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு புரோட்டா இல்லை என பார்த்திபன் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சக்தி முகிலன் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பீர் பாட்டிலால் பார்த்திபன் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி முகிலனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்